பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தியே தீர வேண்டுமென வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், கேள்வி நேரத்தை நடத்த முடியாமல் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வர
இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை கையில் எடுத்து, தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.நேற்று காலையில் லோக்சபா துவங்கியதும், காங்., – தி.மு.க., திரிணமுல், இடதுசாரிகள், சிவசேனா, அகாலி தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர்.
தொடர் அமளி காரணமாக, லோக்சபா நடவடிக்கைகளை அரைமணி நேரத்திற்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். பூஜ்ய நேரத்தின்போதும் அமளிக்குப் பஞ்சமில்லை. இதையடுத்து, மதியம் வரை சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபாவிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த பிரச்னை கிளப்பப்பட்டது. ஆனால், சபைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுதி தர
மறுக்கவே, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், பா.ம.க., – எம்.பி., அன்புமணி பேசியதாவது:தமிழகத்தின் 38 மாவட்டங்களில், 22 மாவட்டங்களின் தண்ணீர் தேவையை காவிரி ஆறு தான் தீர்த்து வைக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, அணையின் குறுக்கே எந்த கட்டுமானங்களையும் கட்ட அனுமதி இல்லை.
ஆனால், மேகதாது அணையை கட்ட, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. இந்த விஷயத்தில், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு முன், மத்திய அரசு தலையிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு கர்நாடக எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, ”ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட பெங்களூருக்கு குடிநீர் தேவைப்படுகிறது. அதைத்தான், நாங்கள் கையேந்தி கேட்கிறோம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.- நமது டில்லி நிருபர் –