சென்னை: சென்னை என்எஸ்சி போஸ் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாரிமுனை அருகே உள்ள பூக்கடை என்எஸ்சி போஸ் சாலை, நடைபாதை வியாபாரிகளால் முழுமையாக ஆக்கிமிக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதையடுத்து, மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி,கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள , ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது என கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், சாலையில் ஆக்கிரமித்து நடத்தப்படும் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், மீண்டும் முளைத்து விடுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகஅரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எனவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசு கோரினார்.
வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, 15 மாற்று இடங்களை அடையாளம் கண்டு தெரிவித்தும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து என்எஸ்சி போஸ் சாலை, வியாபார பகுதி அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நிரந்தர தீர்வு காண்பதற்கு அரசுக்கு 6 வாரம் கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.