பெங்களூரு : ”நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதிலும், தேசிய பேரிடர்களின் போதும் எல்லைப் பாதுகாப்புப் படை முக்கிய பங்காற்றியுள்ளது,” என கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதம் கொண்டார்.பெங்களூரு எலஹங்காவிலுள்ள எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஏற்றுக் கொண்டார்.
பின் அவர் பேசியதாவது:எல்லைப் பாதுகாப்புப் படை நாட்டின் முதல் பாதுகாப்பு படையாகவும், உலகின் மிகப்பெரியதாகவும் உள்ளது.டிசம்பர் 1, 1965ல் இப்படை உருவாக்கப்பட்டது. 1971ல் வங்கதேசப் போரிலும், 1999ல் கார்கில் போரிலும் அவர்களின் வீரம் மேலோங்கியது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் பங்களிப்பு பாராட்டுக்குரியது.இப்படை நாடு முழுதும் ஆயிரக்கணக்கான கி.மீ., சர்வதேச எல்லைகளை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளது. இவர்களின் துணிச்சலால் நாடு பாதுகாப்பாக உள்ளது.இந்த பயிற்சி மையத்தில் பெற்ற உயர்தர பயிற்சி, கடமை உணர்வைத் துாண்டி, தேசபக்தி, தைரியம், சாகசம், வீரம் போன்றவற்றை வளர்க்கும்.நாட்டுக்காக தங்கள் மகன்களை அர்ப்பணித்த குடும்பங்களுக்கு நன்றி. நாட்டு சேவைக்காக, குடும்பத்தில் ஒருவரையாவது ராணுவத்தில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement