பெங்களூரு : ”அண்டை மாநிலங்களின் தனித்துவத்தை கர்நாடகா குறைத்து மதிப்பிடுவதில்லை. அதேவேளையில், உலக அளவில் போட்டியிடுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது,” என ஐ.டி., – பி.டி., துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா உறுதிபட தெரிவித்தார்.பெங்களூரிலிருந்து ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் தெலுங்கானாவுக்கு இடம் மாறியதை, அம்மாநில அமைச்சர் ராமாராவ் வரவேற்றிருந்தார்.
நம்பிக்கை இது குறித்து கர்நாடக மாநில ஐ.டி., – பி.டி., துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று கூறியதாவது:அண்டை மாநிலங்களின் தனித்துவத்தை கர்நாடகம் குறைத்து மதிப்பிடுவதில்லை. அதே வேளையில், உலக அளவில் போட்டியிடுவதில் கர்நாடகா நம்பிக்கை கொண்டுள்ளது.நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். அண்டை மாநிலங்களின் முன்னேற்றத்தை நாங்கள் விரும்புகிறோம்.இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. முழு இந்தியாவும் ஒரே நாடாக வளர்வதை நாங்கள் நம்புகிறோம்.பெங்களூரைச் சேர்ந்த சில தொழில் முனைவோர், பெங்களூருவிலுள்ள சாலைகளின் மோசமான நிலை குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, தெலுங்கானா அமைச்சர் தகவல் தெரிவித்திருந்தார்.கர்நாடகா தற்போது ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பங்களின் தலைநகரமாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஒரே இரவில் இந்த நகரம் இப்புகழை பெறவில்லை.நகரத்தில் ஐ.ஐ.எஸ்சி., எனும் இந்திய அறிவியல் மையத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை நால்வாடி கிருஷ்ணராஜ உடையார் அமைத்தார்.பின், சர்.சி.வி.ராமன், சி.என்.ஆர்.ராவ், ராஜாராமண்ணா போன்ற சிறந்த அறிவியல் தொலைநோக்கு பார்வையாளர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.இதையெல்லாம் கருதி, பெங்களூரின் புகழ், அதன் சாலைகளை மட்டுமே சார்ந்தது அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் டி.கெம்பண்ணா, அரசு நிதியுதவி பெறும் திட்டங்களில் 40 சதவீதம் கமிஷன் வழங்கப்படுகிறது என கூறிஉள்ளார். இது அரசியல் ஆதாயத்திற்கான அறிக்கையே தவிர வேறில்லை.ஊழலற்ற அமைப்பை உருவாக்கவும், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.’டிஜிட்டல்’ அதை அடைவதற்காக, அவர் பல்வேறு செயல்முறைகளை ‘டிஜிட்டல்’ மயமாக்கி வருகிறார்; கணினி மயமாக மாற்ற பாடுபடுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement