புதுடெல்லி: பாரதிய ஜனதாவின் நிறுவன நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நேற்று நடந்த பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் பயனடையும் வகையில் ஒன்றிய அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பாஜ எம்பி.க்கள் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்து செல்ல வேண்டும். எம்பி.க்கள் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். ஒன்றிய அரசின் சுகாதார காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் ஜன் அவுசாதி கேந்திரா திட்டங்கள் குறித்து 7ம் தேதி எடுத்துரைக்க வேண்டும். அரசின் ஏழைகளுக்கு இலவச வீடு, குழாய் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் குறித்து 8, 9ம் தேதி பாஜ எம்பி.க்கள் பொதுமக்களிடையே பிரசாரம் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலே மற்றும் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் முறையே 9, 14ம் தேதி கட்சி சார்பில் கொண்டாடப்படும். 12ம் தேதி கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எம்பிக்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.