கன்னியாகுமரி அருகே இரண்டு இளைஞர்களுக்குள்ளான மோதலில், ஒருவர் மீது மற்றொருவர் வீசிய கல் குறி தவறி, சாலையோரம் நின்றிருந்த பெண்ணின் வாயில் பட்டு அவரது 6 பற்கள் உடைந்து நொறுங்கின.
இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த மீனா என்ற அந்தப் பெண் தனது சிறு வயது மகளை பக்கத்தில் உள்ள கடைக்கு அனுப்பிவிட்டு வாசலில் அவரது வருகைக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் என்பவனும் மிக்கேல் என்பவனும் தெரு நடுவே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டையிட்டவாறு இருந்துள்ளனர். இதில் சுஜித் பெரிய கல் ஒன்றை எடுத்து மிக்கேல் மீது வீசியுள்ளான்.
மிக்கேல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்தக் கல் மீனாவின் வாய்ப்பகுதியில் பட்டு, முன்பக்கத்தில் இருந்த 6 பற்கள் உடைந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தார். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கி போலீசில் ஒப்படைத்த நிலையில், மீனா சிகிச்சை பெற்று வருகிறார்.