தெலங்கானாவில் கஞ்சா போதைக்கு அடிமையான தனது மகனை, தாய் மின் கம்பத்தில் கட்டி வைத்து முகத்தில் மிளகாய் பொடி தூவி தண்டிக்கும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த சிறுவனுக்கு இப்போது கவுன்சிலிங்தான் தேவை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானாவில் உள்ள சூர்யபேட் மாவட்டத்தில், கோடாட் கிராமத்தில் தனது 15 வயது மகன் கஞ்சா போதைக்கு அடிமையானதை அறிந்து அவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து முகத்தில் மிளகாய் பொடி தூவி தண்டித்த வீடியோ சமுக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. அந்த சிறுவன் கஞ்சா போதைப் பழக்கத்தை கைவிடுவதாக உறுதியளிக்கும் வரை தாயார் சிறுவனை தண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோவில் சிறுவன் மின் கம்பத்தில் கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளான். அவனுடைய தாய், மிளகாய் தூள் பூச வருகிறார். அவன் தடுக்கும்போது, மற்றொரு பெண் வந்து அவன் கைகளைப் பிடித்துக்கொள்ள தாய் தனது மகனின் முகத்தில் மிளகாய் தூளை பூசுகிறார். சிறுவன் மிளகாய் தூளால் ஏற்பட்ட எரிச்சலால் துடித்து கத்திக் கதறுகிறான். ஆனாலும், சிறுவனின் தாயார் முகத்தில் மிளகாய் தூள் பூசுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கஞ்சா போதைக்கு அடிமையான மகனை கட்டி வைத்து மிளகாய் பூசுவதற்கு பதில் அவனுக்கு கவுன்சிலிங் தேவை என்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்கும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். சிலர், இது போல, கஞ்சா போதைக்கு அடிமையான மகனை இப்படி தண்டித்தால்தான் திருந்துவான் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோவில் இருக்கும் பெண் கோடாட் கிராமத்தைச் சேர்ந்த ரமணா என்ற பெண்மணி என தெரியவந்துள்ளது. உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், தான் ஒரு தினக்கூலி என்று கூறினார். மேலும், தனது மகன் சுரேஷ் எப்படி, எங்கு கஞ்சாவுக்கு அடிமையானான் என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறினார். “கடந்த ஆண்டு அவனுடைய போதைப் பழக்கம் மோசமாகிவிட்டது. அங்கே இங்கே என கீழே விழுந்து கிடந்தான். நாம் போய் அவனைத் தேட வேண்டும். கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டான். யாரும் கவலைப்படவில்லை” என்று அவர் தெலுங்கில் கூறினார். தாய் தனது மகன் கஞ்சா போதைக்கு அடிமையானது குறித்து பேசிய விடீயோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்த தாய் தனது மகனைத் தண்டிக்கும் முடிவைப் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டனர். ஆனால், அத்தகைய தண்டனையால் சிக்கலைத் தீர்க்க முடியாது. சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”