பெங்களூரு :
காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை கண்டித்து கர்நாடக சட்டசபையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், தான் டெல்லி சென்று ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்துவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்த உள்ளார்.
அதைத்தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசும் அவர், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு கோருகிறார். கர்நாடக மந்திரிசபையில் இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளன.
அதனால் மந்திரிசபையை விரைவாக விஸ்தரிக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பசவராஜ் பொம்மை ஒப்புதல் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசவராஜ் பொம்மையுடன் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோளும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.