ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு Association for Democratic Reforms (ADR) ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். இது தேர்தல் அரசியலில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 2019 -2020 நிதியாண்டில்,
கார்ப்பரேட்
நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற
நன்கொடை
குறித்த ஒரு ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
இதில் மொத்தம் 921.95 கோடி ரூபாய் தேசிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பாஜகவிற்கு மட்டும் 720 கோடி. அதாவது மொத்த நன்கொடையில் கிட்டத்தட்ட 78% நன்கொடையை
பாஜக
பெற்றிருக்கிறது. மீதி 22% தான் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதே 2019-20 நிதியாண்டில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. அதில் பாஜக வெற்றி பெற்று 303 இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் அதன் வாக்கு வகிதம் 37.36% மட்டும்தான். இப்படி நாட்டு மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சி அது வெற்றியே பெற்றிருந்தாலும் கார்ப்பரேட் உலகில் 78% நன்கொடையை பெற்றிருக்கிறது என்றால் என்ன பொருள்? இது ஜனநாயகமா இல்லை பணநாயகமா என்ற கேள்வி எழுகிறது.
இருமடங்கு அதிகரித்த நன்கொடை
மேற்கண்ட ஆய்வறிக்கை மற்றுமொரு தகவலையும் சொல்கிறது. 2017-18 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை 109% சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட இருமடங்கு.
ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான அமைப்பு இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றிருக்கிறது. ஏனெனில் அரசியல் கட்சிகள் ரூ 20,000த்திற்கு மேல் நன்கொடை பெற்றால் அதை தேர்தல் ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் தேவையில்லை. அந்த வருமானம் தனி.
மேற்கண்ட ஆய்வறிக்கை ஐந்து அரசியல் கட்சிகளை ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத
காங்கிரஸ்
கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எவ்வளவு நன்கொடை பெற்றன என்பது இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
மொத்தம் 2,025 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக ரூ 720.407 கோடியை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 154 கார்ப்பரேட நிறுவனங்களிடமிருந்து ரூ 133.04 கோடியைப் பெற்றிருக்கிறது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 நிறுவனங்களிடமிருந்து ரூ 57 கோடியைப் பெற்றிருக்கிறது. மற்ற மாநிலக் கட்சிகள் போல் அல்லாமல் சரத்பவாரின் கட்சி தொழிற்துறை முன்னேறிய மராட்டிய மாநிலத்தில் சற்று செல்வாக்கோடு இருப்பதால் அதற்கு நன்கொடை கிடைத்திருக்கிறது. மேற்கண்ட நிதியாண்டில் சிபிஎம் கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவன நன்கொடை ஏதும் வரவில்லை.
பாஜகவுக்கு அதிக நன்கொடை
பாஜக பெற்ற நன்கொடையில் அதிகம் அளித்த நிறுவனம் எது தெரியுமா? உண்மையில் அது ஒரு அறக்கட்டளை. இந்தியாவின் தொலைத்தொடர்பு முன்னணி நிறுவனமான ஏர்டெல்லை நடத்தும் பார்தி எண்டர் பிரைசஸ் நிறுவனம் முன்னணியாக இருந்து நடத்தும் அறக்கட்டளைதான் புரூடெண்ட் தேர்தல் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளை சென்ற நிதியாண்டில் பாஜகவிற்கு மட்டும் 216 கோடியையும் காங்கிரசிற்கு 31 கோடி ரூபாயையும் கொடுத்திருக்கிறது. மொத்தம் 247 கோடி ரூபாய்.
புரூடெண்ட் அறக்கட்டளை முதலில் சத்யா அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கி வந்தது. இதில் ஏர்டெல் குழும நிறுவனங்கள் முன்னணியாக பங்கு வகிக்கின்றன. அது போக வேறு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் இடம் பெற்றிருக்கின்றன. 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்த அறக்கட்டளை செயல்படுகிறது. கடந்த நிதியாண்டுகளிலும் இந்த அறக்கட்டளை பாஜகவிற்கு மிக அதிக பணத்தை அளித்திருக்கிறது.
2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை எடுத்துக் கொண்டால் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாஜக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டில் கார்ப்பரேட் நன்கொடை 573 கோடி ரூபாய் வந்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் அது 881 கோடி ரூபாயாகவும், 2019-20 இல் அது 921 கோடி ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. இதுதான் மிக அதிகமான நன்கொடை.
2012-13 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுகளுக்கிடையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசிய அரசியல் கட்சிகளுக்கு கொடுத்த நன்கொடை 1024 சதவீதம் அதிகரித்திருப்பதாக மேற்கண்ட ஆய்வு கூறுகிறது. தேர்தல் ஆணையத்திடம் நன்கொடை அளித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல வகைப்பட்டதாக இருக்கின்றன. உற்பத்தி துறை, மின்சாரம் – பெட்ரோல், சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி/இறக்குமதி, ரியல் எஸ்டேட் போன்ற பிரிவுகளில் அவை வருகின்றன.
ஆனால் மேற்கண்ட நிதியாண்டில் 22 கோடி ரூபாயை அளித்த நிறுவனங்கள் எந்த வகையிலும் இல்லை. அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்கள் இணையத்திலும் இல்லை. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
பெரும் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கென்றே அறக்கட்டளைகளை உருவாக்குகின்றன. இதனால் வரி விலக்கு பெறலாம். அறக்கட்டளை என்பதே நலிந்தோருக்கு உதவி செய்யும் என்பதெல்லாம் இங்கே கிடையாது. இந்த நிதியாண்டில் இத்தகைய தேர்தல் கார்ப்பரேட் அறக்கட்டளைகள் மட்டும் மொத்த நன்கொடையில் 43% அல்லது 397 கோடி ரூபாயை அளித்திருக்கின்றன. இதற்கு அடுத்து உற்பத்தி துறை நிறுவனங்கள் நேரடியாக 146 கோடி ரூபாயை அளித்திருப்பதாக அறிக்கை கூறுகிறது.
கடந்த நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக மட்டும் 323 கோடியும், காங்கிரஸ் 71 கோடியும், திரிணாமூல் காங்கிரஸ் 2 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 1.5 கோடி ரூபாயும் பெற்றிருக்கின்றன.
குறைந்து வரும் நேரடி நன்கொடை
இத்தகைய அறக்கட்டளைகளில் ஏர்டெல் போக, பிர்லா, பஜாஜ், மகேந்திரா, முருகப்பா, டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த அறக்கட்டளைகள் 2013 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வைத்துக் கொள்ளலாம் என்று கம்பெனி சட்டங்களில் திருத்தத்தை கொண்டு வந்தார்கள். மேலும் யார் யார் எந்தெந்த கட்சிக்கு நன்கொடை கொடுக்கிறார்கள் என்ற வெளிப்படைத் தன்மையாவது இதில் இருக்கிறது. ஆனால் அம்பானி, அதானி போன்ற மோடியின் ஆதரவாளர்கள் எப்படி நன்கொடை வழங்குவார்கள்? அதுதான் தேர்தல் பத்திரங்கள்.
தேர்தல் பத்திரங்களின் கதை வேறு. அதை ஸ்டேட் வங்கியின் சில கிளைகள் மட்டும் வழங்கும். அவற்றை யார் வாங்கி எந்த தேர்தல் கட்சிகளுக்கு கொடுக்கிறார்கள் என்பது பரம இரகசியம். முக்கியமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் இதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பிட்ட கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு வருமானம் வந்தது என்பதுதான் நமக்குத் தெரியுமே அன்றி அதை யார் வழங்கினார்கள் என்பது மக்களுக்கு தெரியாது. இந்த பத்திரங்களை தனிநபர்களும் வாங்கலாம்.
தேர்தல் பத்திரங்கள்
2019-20 நிதியாண்டில் மொத்தம் 3,355 கோடி ரூபாய்க்கான தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகின. இதில் பாஜக மட்டும் 76% அல்லது 2,555 கோடி ரூபாய் தேர்தல்பத்திரங்களை நன்கொடையாக பெற்றிருக்கிறது. முந்தைய வருடத்தில் 1,450 கோடி ரூபாய் பத்திரங்களை பெற்றது. தற்போது அது 75% உயர்ந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 2019-20 நிதியாண்டில் 318 கோடி ரூபாய்க்கான பத்திரங்களை மட்டும் நன்கொடையாகப் பெற்றது.
இப்படி அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக வரும் நன்கொடை குறைவாகவும் மறைமுகமாக வரும் நன்கொடை அதிகமாகவும் இருக்கிறது என்றால் நமது ஜனநாயகத்தின் தரம் எப்படி இருக்கும்? அதிலும் பாஜகவிற்கு ஏகபோகமாக நன்கொடை வருகிறது என்றால் இந்த நாட்டின் ஜனநாயக அமைப்புகள் எப்படி நடந்து கொள்ளும் என்பது நமது கவலைக்குரிய விசயம்.