கார்ப்பரேட்டில் வேலை செய்தவர் அமைச்சராக உள்ளதால் ஏழை, எளிய மக்களின் நிலை தெரியாது என நிதி அமைச்சரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார்.
சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக பெத்தானியாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்தும் அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுகவினர் முழக்கமிட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பேசியபோது…
வடிவேலு காமெடியை போல தி.மு.க ஆட்சி நடக்கிறது. வடிவேலு காலையில் பயபக்தியுடன் கிளம்பி இரவில் மதுபானம் அருந்திவிட்டு வருவதும் போல வாக்கு சேகரிக்கும் போது பயபக்தியுடன் வந்த திமுக தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்துகொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் உள்ளது.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி ஒன்று ஆனால் நடப்பது வேறொன்றாக உள்ளது. திமுக ஆட்சியில் விலைவாசி எல்லாவற்றிலும் உயர்கிறது. கார்ப்பரேட்டில் வேலை செய்த மதுரையைச் சேர்ந்தவர் அமைச்சராக உள்ளார். அவருக்கு ஏழை, எளிய மக்கள் நிலை தெரியுமா? அதனால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது.
ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி நடக்கவில்லை. பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்தவர்கள். யாரும் பசியோட இருக்க வேண்டாம் என பல திட்டங்களை கொண்டு வந்தனர். புரட்சித் தலைவர் எப்படி சத்துணவு கொண்டு வந்தாரோ, அதைப் போல் ஜெயலலிதா, அம்மா உணவகம் கொண்டுவந்து நற்பெயரை பெற்றார்.
அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு பணம், பொருள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் வழங்கினோம். அம்மா கொடுத்த சாதனை திட்டத்தால் தான் பல முறையில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதைப்போல் எடப்பாடியார் 7.5 சதவீதம் மாணவர்களுக்கு சலுகை கொடுத்து நல்ல திட்டத்தை கொடுத்தார்.
நகை கடன் தள்ளுபடி செய்வோம் அதை செய்வோம் என சொல்லிவிட்டு மக்களை ஏய்த்துவிட்டனர். வரி உயர்வை தி.மு.க அரசு அதிகப்படுத்தியுள்ளது. தி.மு.கவினர் குடும்பத்தோடு சுற்றுலா சென்றீர்கள். நீட் தேர்வு விலக்கு, 7 பேர் விடுதலை என்ன ஆச்சு? இலவச பேருந்து என கூறிவிட்டு சில பேருந்துகளில் மட்டும் தான் அளிக்கின்றனர். தி.மு.க எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பசி பட்டினி ஏற்படும்.
தெர்மாகோல் திட்டம் பொறியாளர் செயல்படுத்திய தவறு, அதை கிண்டல் செய்தார்கள் ஆனால் மின்சாரத்தில் அணில் சென்றதையோ, அமைச்சர் பிப்ரவரி என்று சொன்னதெல்லாம் கிண்டல் ஆகவில்லை. மதுரை காரர்கள் சொன்னால் அதற்கு மட்டும் கிண்டலா?
தி.மு.க ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்து அதிகரித்து விட்டது. போலீஸுக்கே தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம். மதுரை மாநகராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைரமாக ஜொலிப்பார்கள் என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM