துமகூரு : ‘கிராம பஞ்சாயத்துக்கு வந்தால், நாயை அடிப்பது போல அடிப்பேன்’ என, ‘டேட்டா என்ட்ரி’ ஆப்பரேட்டரையும், பொறியாளரையும் மிரட்டிய கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.துமகூரு குனிகல்லின், இப்பாடி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மகேஷ். இவர் ‘நரேகா’ எனப்படும் கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செய்துள்ள பணிகள், தரமானதாக இல்லை என, கிராமத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக, பொறியாளர் கிரிராஜு, ஆய்வுக்கு சென்ற போது, மகேஷ் இடையூறு ஏற்படுத்தினார்.அதுமட்டுமின்றி, பொறியாளர் கிரிராஜையும், டேட்டா ஆப்பரேட்டர் நாகராஜையும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘நான் கிராம பஞ்சாயத்து உறுப்பினர். நான் செய்துள்ள பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. ‘நான் கூறியபடி பில் தொகையை வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்துக்கு வந்தால், உங்களை நாயை அடிப்பது போன்று அடிப்பேன்’ என மகேஷ் திட்டியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, அடாவடி கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மீது குனிகல் போலீஸ் நிலையத்தில், பொறியாளரும், டேட்டா ஆப்பரேட்டரும் புகார் செய்துள்ளனர்.
Advertisement