வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-குற்றவாளிகளின் ‘பயோ மெட்ரிக்’ எனப்படும் உருவ அடையாளங்கள் குறித்த தகவல் சேகரிப்பு மசோதா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்தை அடுத்து லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் குற்றவியல் நடைமுறை சட்டத்தில், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் குறித்த பயோ மெட்ரிக் தகவல்களை பதிவு செய்யும் உரிமையை போலீசாருக்கு வழங்குவது தொடர்பான மசோதா, கடந்த வாரம் லோக்சபாவில் தாக்கலானது.’இது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது’ என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இம்மசோதா குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபாவில் நேற்று கூறியதாவது:உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்த, குற்றவாளிகளின் பயோ மெட்ரிக் தகவல் அவசியம். குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும், குற்றச் செயல்களை நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் இது உதவும். தற்போது, நீதிமன்றங்களில் குற்றங்களை உறுதி செய்வதில் போலீசாருக்கு பல்வேறு பின்னடைவுகள் உள்ளன.
இது, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கை பேணுவதில் இடையூறு விளைவிக்கிறது.அடுத்த தலைமுறையினரின் குற்றங்களை, பழைய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முடியாது. அதற்கான மாற்றங்களை சட்டத்தில் உருவாக்க வேண்டும்.குற்றவாளிகளை விட, போலீசார் மற்றும் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கை முன்னோக்கி செல்ல வேண்டும்.
இதற்கு குற்றவாளிகளின் பயோ மெட்ரிக் பதிவுகள் உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து, எம்.பி.,க்களின் குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இம்மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.அமித் ஷா நகைச்சுவைஇந்த மசோதா தொடர்பாக மத்திய உள்துறை அமித் ஷா பேசும்போது, ”என் குரல் சத்தமாக இருப்பதால், என்னை கோபக்காரன் என பலரும் நினைக்கின்றனர். உண்மையில் யாரையும் நான் திட்டுவது இல்லை. காஷ்மீர் விஷயம் தவிர, மற்ற எந்த விஷயத்துக்கும் நான் கோபப்படுவது இல்லை,” என்றார்.
Advertisement