கொடூரக் குற்றவாளிகளுக்கான தண்டனையை குற்றவியல் அடையாள சட்ட மசோதா உறுதிப்படுத்தும்: ரவீந்திரநாத் நம்பிக்கை

புதுடெல்லி: குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 விவாதத்தில் அதிமுக எம்.பியான ரவீந்திரநாத் மக்களவையில் உரையாற்றினார். அதில் அவர், கொடூரக் குற்றங்களின் குற்றவாளிகளுக்கானத் தண்டனையை இந்த மசோதா உறுதிப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து தேனி மக்களவை தொகுதியின் எம்பியான பி.ரவீந்திரநாத் பேசியது: “ஒரு நாகரிக மற்றும் மேம்பட்ட சமுதாயம் உருவாகவும், பராமரிக்கவும், நாகரிகமான மற்றும் அதிநவீன போலீஸ் படை மிகவும் அவசியம். இந்திய காவல் துறையை காலனித்துவப் பிரச்சினைகளை தீர்க்க, காவல் துறை சீர்திருத்தங்கள் தேவை. இவை, நமது நாட்டின் பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் நம்புகிறேன். மொத்தம் ரூ.26,275 கோடி செலவில், 2025-26 வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் திட்டத்தை நீட்டிப்பதை உறுதி செய்ததற்காக எங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நிதியைப் பெருமளவு குறைத்துப் பயன்படுத்துதல் மற்றும் திசை திருப்புதல் (வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துதல்) போன்ற புகார்கள் இருப்பதால், உள்துறை அமைச்சகம் சரியான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நமது தமிழ்நாடு காவல் துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரானதாகப் பெருமை கொள்கிறது. மேலும், பல நவீனமயமாக்கல் மற்றும் சேவை நிலை சீர்திருத்தங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகவும் உள்ளது. உள்துறை அமைச்சர் ஐயா, தமிழ்நாடு காவல் துறைக்கு நவீனமயமாக்கல் நிதியில் இருந்து அதிகளவு பங்கு வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக, தமிழ்நாடு காவல் துறை எம்.பி.எஃப் நிதியைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. உலகம் டிஜிட்டல் சமுதாயத்தை நோக்கி நகரும்போது, புதிய யுகக் குற்றங்களுக்கு புதிய யுகக் காவல் தேவைப்படுகிறது. குற்றவியல் விசாரணையைப் பொறுத்தவரையில், காவல் நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. குற்றம் நடந்த இடத்துக்கு முதலில் வருபவர்கள் அவர்கள்தாம். இருப்பினும், பெரும்பாலான காவல் நிலையங்கள் பூர்வாங்கத் தடயவியல் சோதனை மற்றும் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கு தகுதியற்றவையாக உள்ளன.

காவல் நிலைய அளவிலேயே தடயவியல் நிபுணர்கள் உள்பட திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இதன்மூலம் காவல் துறை சிறப்பான நிலையைப் பெறும். காவல் துறைப் பயிற்சியின்போது, பயிற்சியாளர்களின் உடல் வலிமையை அதிகரிப்பதில் ஒட்டுமொத்த கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், தடயவியல், சட்டம், சைபர்-கிரைம், நிதி மோசடிகள் போன்ற பிற அத்தியாவசியமான திறன்கள் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. புதியயுக விசாரணையில் கவனம் செலுத்துவது பயிற்சி நிலையிலேயே தொடங்க வேண்டும்.

மேலும், காவலர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிப்பது காவலர் நிலையிலிருந்து ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், காவல் படைகளின் நவீனமயமாக்கல் (எம்.பி.எஃப்) திட்டத்தில் இருந்து புதியயுகக் காவல் மற்றும் தடயவியல் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். தடயவியல் ஆய்விலும் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும். ஆதாரங்களைச் சேகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தரவுகளைச் சேதப்படுத்துதல் மற்றும் தவறாகப் பயன்படுத்தாமல் பாதுகாப்பதும் முக்கியம்.

தரவுகளின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பான பராமரிப்பும், பிளாக்செயின் தொழில்நுட்பம் போன்ற புதிய யுகத் தீர்வுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சட்டம் – அமலாக்கமாக இருந்தாலும் சரி, விசாரணையாக இருந்தாலும் சரி, நமது நாட்டில் உள்ள காவல் துறையானது, சாமானியர், தமது அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பு உணர்வுடன் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். நமது சமூகத்தின் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர், எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்கள், பெண்கள் மற்றும் மூத்தக் குடிமக்கள் – நமது காவல் துறையின் பாதுகாப்பின் திறன் மீது போதுமான நம்பிக்கையை உணர வேண்டும். இதன்மூலம் எனது அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சார்பில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022-க்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.