சீமை கருவேலத்தால் விஷமாக மாறிவிடும் நிலத்தடி நீர் – பின்னணி, பாதிப்பு குறித்து ஓர் அலசல்

சீமைக் கருவேல மரங்கள் தமிழகத்திற்கு எப்படி வந்தது. அதன் பின்னணியும், பாதிப்பும் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
மத்திய, தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஐரோப்பியர்களால், 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பயனுள்ள, வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்ற அடிப்படையில் ஆசியா, ஆஸ்திரேலியா உள்பட உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்ட தாவரம், சீமைக்கருவேல மரம்.
வேளாண் பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்று நம்பப்பட்டு, கடந்த 1950- 60களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து விதைகளாக கொண்டுவரப்பட்டு தூவப்பட்டவை தான் இன்று தீராத தலைவலியாக மாறியிருக்கும் சீமைக் கருவேலம்.
தமிழ்நாட்டில் இந்த மரங்களை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தொலைதூர சாலை வழிப் பயணங்களின் போது அதிகமாக கண்ணில் படக் கூடியவை இம்மரங்கள் தான். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவை தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி ஏறத்தாழ 25 சதவித விளைநிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.
image
இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியதாகும். மழை பெய்யவில்லை என்றாலும், நிலத்தில் நீரே இல்லை என்றாலும் கூட இவை வளரும் தன்மையுடையவை. ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் பரப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலும் தன்னை சுற்றி இருக்கும் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகிறது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.
தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகில் வசிக்கிறவர்களின் உடலில் தோல்கள் வறண்டு போவதைப் பார்க்க முடியும். இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது. இம்மரம் வளரும் இடங்களில் நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டு வறண்ட பூமியாக மாறிவிடுகிறது.
image
இம்மரத்தின் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் இவை பிராணவாயுவை மிகக் குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.
அமெரிக்க தாவரவியல் பூங்கா, வளர்க்க கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிபட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது இந்த சீமைக்கருவேல மரம் தான். ஒரு மரத்தை நட்டு வைத்து வளர்ப்பதை விட சீமைக்கருவேல மரங்களை அழிப்பது மிகவும் முக்கியமானது.
தமிழ்நாட்டில் வேலிகாத்தான் என்றழைக்கப்படும் இந்த தாவரம் விளைநிலங்களை நாசம் செய்யக்கூடியது என்பது நீண்ட காலத்திற்குப் பின்னரே தெரியவந்தது. திரும்பிய பக்கமெல்லாம் காட்சியளிக்கும் இந்தத் தாவரத்தை ஒழிப்பதற்கான இயக்கம், 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
image
இந்த இயக்கம் சீமைக்கருவேல மரங்களினால் ஏற்படும் தீமைகளை, விழிப்புணர்வு மூலம் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துரைத்து வருகிறது. இதனால் விழித்துக்கொண்டோர், சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அகற்றி வருகின்றனர். மக்களிடம் முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனை வேரறுக்க ஆண்டுகள் ஆகும் என்றே கூறப்படுகிறது.
எந்தத் தாவரமும் முளைக்காத இடத்தில் கூட முளைத்து நிலத்தை நாசம் செய்யும் சீமைக்கருவேல மரங்களை, தமிழ்நாட்டிலிருந்து அடியோடு அகற்ற பத்து ஆண்டுகள் ஆகும் என்று தலைமை வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு தலைமை வனப்பாதுகாவலர் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சீமைக்கருவேல மரங்களை 10 ஆண்டுகளுக்குள் முழுமையாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூஸ் 360 டிகிரி வீடியோவில் விரிவாகக் காணலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.