சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை:

சென்னை சின்ன போரூர் பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் கருவி ஆகியவற்றை பொதுமக்களுக்கான மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கிய பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் சுகாதாரத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட 110 அறிவுப்புகளும் வருகிற 29-ந் தேதிக்குள் செயல்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்பிணிகளுக்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகள் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். சென்னையில் 10 நகர்ப்புற சுகாதார மையங்களில் 1.10 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை கண்டறிய நுரையீரல் செயல்பாட்டை கணிக்கும் ஸ்பைரோமீட்டர் கருவிகள் 66.3 லட்சம் செலவில் தமிழகம் முழுவதும் 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் கிராமப்புறத்தில் 25 ஆரம்ப சுகாதார மையங்களும் நகர்ப்புறத்தில் 25 சமுதாய சுகாதார மையங்களும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. வரும் 29-ந் தேதி அதற்கான அறிவிப்பு வரும்.

சித்த மருத்துவ பல்கலைகழகத்துக்கான தற்காலிக அலுவலகத்தை அமைந்தகரையில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் 14-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

19.2 ஏக்கர் நில பரப்பில் மாதவரத்தில் சித்த மருத்துவ பல்கலைகழகம் அமைக்கப்படும்.

அண்ணா சதுக்கத்திலிருந்து வரும் 8-ந்தேதி 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல்வர் தொடங்கி வைப்பார். அவை அடிப்படை பரிசோதனை வசதிகள் கொண்டவை. தமிழகம் முழுவதும் இந்த வாகனங்கள் செல்லும்.

தடுப்பூசி முகாம்களுக்கு பல ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் பணி செய்த போதும், 4 அல்லது 5 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். எனவே இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம்கள் தொடர்வது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும்.

வெளிநாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர் கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.