போக்குவரத்து விதியை மீறி சாலையில் சென்றவரை கேள்வி எழுப்பிய பெண் காவலரை தரக்குறைவாக பேசி, பணி செய்யவிடாமல் இடையூறு செய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் ஆயுதப்படை பெண் காவலர் அபர்ணா(28), பணியில் இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர், சிகப்பு நிற சிக்னல் விழுந்த பின்பு சாலையை கடக்க முயன்றுள்ளார். எதிரே வாகனங்கள் சாலையில் சென்றதால், அந்த நபர் சாலையின் மையப் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் சிக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அங்கு பணியில் இருந்த பெண் காவலர் அபர்ணா, ஏன் சிக்னல் விழுந்த பிறகு சாலையை கடக்க முயல்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், போக்குவரத்து விதியை மீறியதால் மற்ற வாகனங்களும் போக முடியாமல் சாலையில் சிக்கி தவிக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்குப் பெண் காவலரை அந்த நபர் ஒருமையில் பேசி தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். பொதுமக்கள் மத்தியில் திட்டியதால் மனவுளைச்சலுக்கு ஆளான பெண் காவலர், அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் அந்த நபரை பிடித்துகொடுத்துள்ளார்.
பின்னர் போலீசார் விசாரித்ததில், அவர் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ராம்குமார்(28), என தெரியவந்தது. பணியில் இருந்த பெண் காவலரை தரக்குறைவாக பேசியும், பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறி, ராம்குமார் மீது செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM