சொத்துவரியை உயர்த்தமாட்டோம் என்ற வாக்குறுதியை தி.மு.க. மீறிவிட்டது- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை:

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான 8 மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்களான விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், கே.பி. கந்தன், ஆதிராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தேர்தல் நேரத்தில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சியை பிடித்தது. தேர்தல் அறிக்கையில் கொரோனாவால் பொருளாதாரம் முடங்கிவிட்டதால் நிலைமை சீரடையும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என்று கூறி இருந்தார்கள்.

ஆனால் இப்போது 150 சதவீதம் வரியை உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் ஏழை-எளிய மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கொரோனா 4-வது அலையும் வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். இந்த சூழ்நிலையில் மக்களை வதைக்கும் வகையில் வரி உயர்வை அறிவித்துள்ளார்கள். எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாகவே இருக்கிறது.

10 ஆண்டுகள் வரியில்லாத, சுமையில்லாத ஆட்சியை அ.தி.மு.க. வழங்கியது. தி.மு.க. கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என்றார்கள். கொடுத்தார்களா? ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றார்கள். உயர்த்தினார்களா? சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என்றார்கள் குறைத்தார்களா?

இப்படி பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்கள். அவர்களது சுய நலமும், இரட்டை வேடமும் மக்களுக்கு தெரிந்துவிட்டது. மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். மக்கள் வடிக்கும் கண்ணீருக்கு தி.மு.க. அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை நீட் தேர்வை ரத்து செய்வது என்றார்கள். செய்ய முடிந்ததா? ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு என்றார்கள். எந்த விடியலையும் காணவில்லை. வரியைத்தான் போட்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்த்திய போது ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் போராடினார். நாங்களும் திரும்ப பெற்றோம். இப்போது சொல்கிறேன். இந்த அநியாயவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டமாக வெடிக்கும்.

அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களை இடமாற்றி பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் தொழிற்சங்கம் சார்பில் மிகப்பெரிய அறப்போராட்டம் நடக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் எம்.பி.க்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், டாக்டர் ஜெயவர்தன் மற்றும் ராயபுரம் மனோகர், மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் கோகுல இந்திரா, ஜே.சி.டி.பிரபாகர், நடிகை விந்தியா, பகுதி செயலாளர் ஏ.எம்.காமராஜ், சி.கே.முருகன், ஷேக் அலி, சைதை சுகுமார், இனியன், அண்ணாமலை, எம்.ஜி.ஆர்.நகர் குட்டி, கோயம்பேடு மோகன், வக்கீல் சதாசிவம், வேளச்சேரி எம்.எ.மூர்த்தி, எஸ்.பி. குமார், ஏ.ஏ.அர்ஜூனன், கே.பி.கே.சதீஷ்குமார், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர் இ.சி. சேகர், புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வராணி சுந்தர், எம்.ஜி. ஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் இன்பநாதன், சைதை கடும்பாடி, சைதை இளங்கோ, அம்மா பேரவை துணை செயலாளரும், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர், எம்.ஜி. ஆர். இளைஞரணி மாநில துணை செயலாளர் 193-வது வார்டு துரைப்பாக்கம் கவுன்சிலர் டி.சி. கோவிந்த சாமி, மாநில மாணவரணி துணை செயலாளர் ஆ.பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.