தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசின் 15ஆவது நிதிக்குழு வழிகாட்டுதலின்படியே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். தமிழ்நாட்டில் 7 சதவீத வீடுகளுக்கு மட்டுமே 100சதவீதம் முதல் 150சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்படுவதாக விளக்கமளித்தார்.
இந்நிலையில், சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக தரப்பில் இன்று தமிழ்நாடு முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகிறது . ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமை தாங்கினார். திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரே நடந்த போராட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கினார். சென்னையில் 15 மண்டலங்களிலும் அதிமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ” சொத்து வரி உயர்வால், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வசித்த வாடகைதாரர்கள், இனி மாதம் ரூ.2,500 வாடகை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தி.மு.க., அரசை பொறுத்தவரை மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் வரி உயர்த்தப்படவில்லை
மத்திய அரசு மீது பழியை சுமத்தி திமுக அரசு தப்பிக்க முயல்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக திறமையில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 487 ஆவது வரிசையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு, தற்போது அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன என திமுக அரசு நினைக்கிறது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “பொய்யான வாக்குறுதி கொடுத்து திமுக ஆட்சியை பிடித்தது.தேர்தல் அறிக்கையில் கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலைமை சீரடையும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், தற்போது 150 சதவீதம் வரியை உயர்த்தி உள்ளார்கள்.இது ஏழை எளிய மற்றும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கும்.
எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருமோ அப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாகவே உருக்கிறது. அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்திய போது ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் போராடினார். நாங்களும் திரும்ப பெற்றோம். இந்த அநியாய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தார்.