மும்பை,
ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் – படிக்கல் ஜோடி நிதானமாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் 37 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 8 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் அதிரடி வீரர் ஹெட்மயர் களமிறங்கினார். பட்லர் – ஹெட்மயர் ஜோடி இறுதி நேரத்தில் வாணவேடிக்கை காட்ட ராஜஸ்தான் அணியின் ரன் கணக்கு மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்துள்ளது. இதை தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.