முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் 3 பேரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை நடத்த உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் உள்ளிட்ட 156 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் ஆஜராகி விட்டதால் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில், இன்று முதல் 7ஆம் தேதி வரை 3 நாட்கள் குறுக்கு விசாரணை நடைபெற உள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.
ஒரு நாளைக்கு மூன்று மருத்துவர்கள் வீதம் 3 நாட்களுக்கு அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார். இந்த விசாரணையுடன் மரணம் தொடர்பாக வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை முடிவுற்றதும் அது தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.