புதுடெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், ‘நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்கவில்லை’ என உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை பதில் மனு தாக்கல் செய்துள்ளார். தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலுாரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மதம் மாற்றம் செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது. பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இதுதொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவியின் தந்தை பதிலளிக்க கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாணவியின் தந்தையின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘எங்களது தரப்பில் சிபிஐ விசாரணை வேண்டும் என தெரிவிக்கவில்லை. இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்றமே தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எங்களது தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் எனது மகள் மரணத்தில் மதமாற்றம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளேன். ஆனால் அதனை காவல்துறை கருத்தில் கொள்ளவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் தமிழக காவல் துறையின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.