தமிழகத்தில் விஜய்யின் ‘பீஸ்ட் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளே ஒதுக்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல், 2018-ம் ஆண்டு யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. விஜயின் ’பீஸ்ட்’ படத்தை அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதை சரியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ள ’பீஸ்ட்’ வினியோக நிறுவனம், அந்தப் படத்தை 800 அதிகமான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு திரையரங்களை ஒப்பந்தம் செய்து வருகிறது என கூறப்படுகிறது.
’பீஸ்ட்’ படத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ’கேஜிஎஃப் படத்திற்கும் வரவேற்பு உள்ளது. ஆனால், விஜய் படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதால், இந்தப் படத்திற்கு குறைந்த அளவிலான திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்கம் திருப்பூர் சுப்பிரமணியன் பேசும்போது, ”தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் படங்களின் திரையரங்கு எண்ணிக்கை எப்படி இருந்தாலும், இரண்டு படங்களும் சினிமா வியாபாரத்தை விரிவுபடுத்தும். கொரோனாவிற்கு பிறகு மாஸ்டர், வலிமை, ஆர்.ஆர்.ஆர் படங்கள் வசூல் ரீதியில் வெற்றியடைந்தன. அது போலவே, இந்த இரண்டு படங்களும் தங்களுக்கு லாபம் கொடுக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்” என்று சுப்ரமணியன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.