சென்னை: சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஏப்.5) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்
சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஏப்.5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு, சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேசுகையில் “கடுமையான சொத்து வரியை 25 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் பாதிக்கின்ற வகையில், வாடகை இல்லங்களில் வசிக்கிறவர்கள் பாதிக்கின்ற வகையில் இன்றைக்கு சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள். சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாபெரும் அறப்போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரோனா அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை. 4-வது அலை ஜூனில் வரும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியமே தெரிவித்திருக்கின்ற நிலையில், சொத்து வரியை உயர்த்தியிருப்பது, மக்களை கண்ணீரில் மிதக்கவிடுகின்ற செயலாகும்.
திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளைத்தந்து ஆட்சியில் அமர்ந்து, மக்களை வாட்டுகிற வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்கள் விரோத ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பான ஆட்சி. மக்களை வாட்டி வதைக்காத வரியில்லாத பட்ஜெட், வரியில்லாத ஆட்சிதான் அதிமுக ஆட்சி நடந்தது என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
505 வாக்குறுதியில் எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை. மகளிருக்கு 1000 ரூபாய் உதவித் தொகை இதுவரை தரவில்லை. ஆட்சிக்கு வந்தால்,ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தித் தருவதாக கூறினார்கள், அதுவும் தரப்படவில்லை. சிலிண்டருக்கு மானியம் ரூ.100 தருவாதக் கூறினார்கள், அதுவும் தரவில்லை. இப்படி மக்களுக்கு பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு எதையும் நிறைவேற்றவில்லை. ஆளும்கட்சியினரின் சுயநலம், கபடநாடகம், இரட்டை வேடத்தை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.