சென்னை: நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளிக்காததால் அவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவை யில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருமன தாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பினார்.
இதையடுத்து, சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு, நீட் தேர்வு தொடர்பாக மீண்டும் ஒருமனதாக மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதையும் இதுவரை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த மாதம் 15-ம் தேதி ஆளுநரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சரிடம் திமுக எம்.பி.க்களும் ஏற்கெனவே மனு அளித்துள்ளனர். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தபோது நீட் தேர்வு விலக்கு குறித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த நோட்டீஸ் அளித்தார். அதில், அரசியலமைப்பு அளித்த கடமை, பொறுப்புகளில் இருந்து தமிழக ஆளுநர் விலகி நடப்பதாகவும், சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 3 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்ளதாகவும் குறிப்பிட் டிருந்தார்.
இதுகுறித்து பேச அனுமதிக்கும்படி மக்களவைத் தலைவரிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். ஆனால், அவருக்கு பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து ‘தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்’ என கோஷம் எழுப்பினர். பின்னர், தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்காததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.