சென்னை: துறைகள் வாரியான மானியக் கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை (6-ம் தேதி) கூடுகிறது. முதல்நாளில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. மானியக் கோரிக்கைகளில் இடம் பெறும் புதிய அறிவிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 18-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 19-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த இரு பட்ஜெட்கள் மீதும் மார்ச் 21 முதல் 24 வரை விவாதம் நடத்தப்பட்டது. அதன்பின், பேரவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை ஏப்.6-ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 30-ம் தேதி பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பேரவை கூட்டத் தொடர் ஏப்.6 முதல் மே 10-ம் தேதி வரை நடக்கும் என பேரவைத் தலைவர் அறிவித்தார்.
அதன்படி, மானியக் கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை நாளை (ஏப்.6) கூடுகிறது. முதல்நாளில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. இந்நிலையில், மானியக் கோரிக்கைகளில் இடம் பெற வேண்டிய புதிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து முக்கிய துறைகளின் அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோ சனை நடத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக ஏப்.6 முதல் மே.10 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் நீர்வளம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
கடந்த நிதியாண்டில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆய்வு செய்தார். இந்த நிதியாண்டின் மானியக் கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, இ.பெரியசாமி, கே.ஆர். பெரியகருப்பன், அர. சக்கரபாணி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, கூட்டுறவுத் துறை செயலர் முகமது நசிமுத்தின், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை செயலர் நா. முருகானந்தம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஊரகவளர்ச்சித் துறை செயலர் பி.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.