வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தெற்கு டில்லியில் நவராத்திரியை முன்னிட்டு ஏப்.,2 முதல் ஏப்.,11 வரை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிப்பதாக என மேயர் உத்தரவிட்டுள்ளதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தெற்கு டில்லியில் நவராத்திரியை முன்னிட்டு ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை இறைச்சி கடைகளை அடைக்க சொல்லி தெற்கு டில்லி மேயர் முகேஷ் சூர்யன் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: நவராத்திரி என்பது ஹிந்துக்கள் கொண்டாடும் புனித பண்டிகை. இந்த பண்டிகை காலத்தில் மக்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, கடுமையான சைவ உணவு விரதத்தை கடைபிடிப்பார்கள். மாமிசங்களால் அவர்களின் மத ரீதியான உணர்வுகள் பாதிக்கப்படும் என்பதால், நவராத்திரி நடக்கும் ஏப்.,2 முதல் ஏப்.,11 வரை இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.
ஹிந்துக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறி இறைச்சி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேயரின் இந்த உத்தரவு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛இதுபோன்ற கொள்கை விதிகள் எதுவும் இல்லாததால், உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த முடியாது. இந்த தடை உத்தரவானது அதிகாரிகளால் வணிகர்களை துன்புறுத்துவதற்கு வழிவகுக்கும் என்பதால் இது நல்லதல்ல.’ எனக் கூறினார்.
Advertisement