கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது.
இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஏப்ரல் 1ம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்கு பிறகு இன்று அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கோத்தபய ராஜபக்சே. அந்நாட்டின் கெஜெட்டில், ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முறைப்படி அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர இலங்கையின் அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்தது.
வலுத்து வரும் போராட்டம்: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி நேற்று எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள் ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனால் முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.