புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்கள் ஆலோசனை நடத்தது. நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி, பாஜக ேதசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில், ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் மற்றும் அலுவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் செய்து வரும் அமளி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் நிறுவன நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில், சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களுக்கும் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது தொடர்பாக எம்பிக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.