நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுடன் கூடி கலந்தாலோசித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்த கட்சி தலைவர்களின் கூட்டம் ஏற்கனவே 12.00 மணிக்கு நடைபெறவிருந்ததாக குறிப்பிட்ட சபாநாயகர் தற்பொழுது 2.00 மணிக்கு கூட்டம் நடைபெற ஏற்பாடாகி இருப்பதாக தெரிவித்தார்.
இன்று காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது.
வழமையான அலுவல்களை தொடர்ந்து நாட்டின் இன்றைய நிலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.
இதற்கு அமைவாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
ஐக்கியதேசிய கட்சி உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றுகையில் பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறக்கூடிய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அமைய வேண்டும் என்று கூறினார்.
தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தமது முன்னணி எந்த வகையிலும் உடன்படப்பேவதில்லை என்றும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஷாநாயக்கவும் இதே கருத்தையே முன்வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில் இடைக்காக அரசாங்கம் ஒன்றை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினார்.
அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றுகையில் நாட்டை தற்போதைய நிலையில் இருந்து கட்டியெழுப்பும் விடயத்தில் எதிர் தரப்பினர் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு இல்லை என்பது இன்று பிரதிபலித்துள்ளது என்றார்.
இந் நிலையில் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வை காணும் விடயத்தில் ஒருமித்த கருத்து உடன்பாடு முக்கியமானது என்று குறிப்பிட்டார்.