சோழவரம் அருகே தனியார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் சிசுவை வீசி சென்ற விவகாரத்தில், சாய்ராபானு என்ற பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அத்திப்பேடு பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் கழிவறையின் மேல், தொப்புள் கொடியுடன் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சோழவரம் காவல்துறையினர் ஐபிசி 318 கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சியில் கர்ப்பிணிப்பெண் ஒருவர், மற்றொரு பெண்ணுடன் ஆட்டோவில் வந்து இறங்கி, மருத்துவமனைக்குள் சென்று, சிறிது நேரத்தில் சாதாரணமாக நடந்து ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை பார்த்த காவல் துறையினர், அந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதையடுத்து விசாரணையில், அந்தப்பெண் கும்மிடிபூண்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சாய்ராபானு (33) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்த விரைந்து சென்ற காவல் துறையினர், அந்தப் பெண்ணை சோழவரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்து விட்ட நிலையில், வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டு கர்ப்பமாகியுள்ளார்.
பிரசவத்தை மறைப்பதற்காக மருத்துவமனைக்கு கடந்த 2-ம் தேதி இரவு ஆட்டோவில் வந்து இறங்கி வயிற்றுவலி எனக்கூறி, கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று செவிலியரிடம் கூறியுள்ளார் அந்தப் பெண். பின்னர், கழிவறைக்குச் சென்று பிரசவம் ஆனதும், குழந்தையை கழிவறையின் மேல் வைத்து விட்டு வந்துவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை அடுத்து அப்பெண்ணை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும், மருத்துவமனையின் பரிசோதனை முடிவுகள் வந்ததும், வழக்கின் தன்மை மாறும் என்றும், அதற்குப் பிறகு கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM