கோல்கட்டா-மேற்கு வங்கத்தின் ஆலியா பல்கலைக்கழக துணை வேந்தரை, மாணவர் சங்க தலைவர் தரக்குறைவாக பேசிய விவகாரத்தில், தலைமை செயலர் அறிக்கை தர, கவர்னர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோல்கட்டாவில் உள்ள ஆலியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முகமது அலியின் அலுவலக அறைக்கு, 1ம் தேதி சென்ற மாணவர் சங்க தலைவர் கியாசுதின் மொண்டல் உட்பட சில மாணவர்கள், துணை வேந்தரை முற்றுகையிட்டு தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர்.’பல்கலை.,யின் பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கான பட்டியலில், தாங்கள் சிபாரிசு செய்யும் மாணவர்கள் இடம்பெற வேண்டும்’ என, மிரட்டல் விடுத்தனர்.
இதற்கு, துணை வேந்தர் மறுவார்த்தை பேசாமல் தன் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.இந்தக் காட்சிகள், ‘மொபைல் போன்’ கேமராவில் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவின. இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, துணை வேந்தர் முகமது அலி கூறுகையில், ”கியாசுதின் மொண்டல் உள்ளிட்ட மாணவர்கள், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக என்னை முற்றுகையிட்டு, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர். உதவி கேட்டு போலீசை அழைத்தோம். ஒருவரும் வரவில்லை,” என்றார்.இந்த சம்பவத்துக்கு, பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
”மாணவர் சங்க தலைவர் கியாசுதின் மொண்டல் திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்தவர். எனவே தான், போலீஸ் சம்பவ இடத்துக்கு வரவில்லை,” என, பா.ஜ.,வைச் சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.கியாசுதின் மொண்டல் சில ஆண்டுகளுக்கு முன்னரே, திரிணமுல் காங்., மாணவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக, அக்கட்சியின் மாநில தலைவர் திரிணன்குர் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கியாசுதின் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.துணை வேந்தர் முற்றுகையிடப்பட்ட, ‘வீடியோ’ காட்சிகளை, கவர்னர் ஜக்தீப் தன்கர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.’இந்த மோசமான சம்பவம் தொடர்பாக, தலைமை செயலர் என்னை சந்தித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.