பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அந்தப் படத்தில் தீவிரவாதம் தொடர்பாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் குவைத் நாட்டில் திரையிட அந்நாட்டு தணிக்கைத் துறை மறுத்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி, இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்திரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாவதால் இந்தப் படத்தை தடை செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் காலத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுவதே நிதர்சனமாக இருக்கும் போது திரைப்படங்களில் தீவிரவாதிகளாக சித்திரிப்பது தொடர்ந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு, “தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்திரித்துள்ள விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, அத்திரைப்படத்தை வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.