ஹாட்ரிக் அடிக்க ரெடியாகிவிட்டார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிகளைத் தொடர்ந்து விஜய்யுடன் இப்போது ‘பீஸ்ட்’ வருகிறது. டிரெய்லர் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்க, ரிலீஸ் பரபரப்பிலும் முகம் மலர்ந்து வரவேற்கிறார்.
நெல்சன் ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்டுட்டே இருக்குமாமே..? விஜய் ஷாக் ஆனாரா?
“உண்மைதான். ‘பீஸ்ட்’க்கு முன்னாடி படமான ‘டாக்டர்’ ஸ்பாட்டும் அப்படித்தான் இருந்துச்சு. ‘பீஸ்ட்’ல இந்த ஜாலி இன்னும் அதிகமாகிடுச்சு. விஜய் சார், ஸ்பாட்ல செம கூல் ஆக இருப்பார். அதுவே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜியை அள்ளும். நானும் என்னோட ஸ்பாட்டை எப்பவும ஜாலியா கொண்டு போகணும்னுதான் எதிர்ப்பார்ப்பேன். ஏன்னா, என் நண்பர்கள் வட்டமே நிறைய பேர் இருந்தாங்க. விடிவி கணேஷ், யோகிபாபு, சுனில், ரெடின், கிளி அப்புறம் என் உதவி இயக்குநர்கள் டீம்னு அத்தனை பேர் இருந்தாலே செட் கலகலனு இருக்கும். திடீர்னு வெளியே இருந்து வந்து பார்க்கறவங்களுக்கு ஷாக் ஆகும். ‘என்ன இது ஷூட்டிங் மாதிரி தெரியலீயே… சிரிச்சு ஜாலியா விளையாடிட்டே இருக்காங்களே’னு கேட்பாங்க. கேட்டிருக்காங்க. என் ஸ்பாட் அப்படித்தான் இருக்கும். இதை ஒண்ணும் பண்ணவும் முடியாது.
விஜய் சாருக்கும் இது புது எக்ஸ்பீரியன்ஸாதான் இருந்திருக்கும். முதல் ரெண்டு நாள் ஷூட்ல இதையெல்லாம் பார்த்துட்டு, ‘என்ன நெல்சா… எல்லாரும் ஜாலியா சிரிச்சு விளையாடிட்டே இருக்காங்க…’னு ஆச்சரியமாகிக் கேட்டிருக்கார். அப்புறம் அவரே எங்க டீமோட உழைப்பைப் பார்த்துட்டு, ‘ஒர்க் எல்லாம் கரெக்ட்டா போயிடுது… நல்ல டீமா இருக்கு’ன்னு சந்தோஷமாகவும் சொல்லியிருக்கார். அதைப் போல நாங்களும் செட்ல யாருக்கும் டென்ஷன் கொடுக்க மாட்டோம். எங்களுக்கும் யாரும் டென்ஷன் கொடுக்காதவாறு பார்த்துக்குவோம். இதுல முக்கியமான ஒரு விஷயம், இன்னும் எத்தனை படங்கள் பண்ணினாலும் கூட, ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நடந்த நாள்கள் எல்லாமே இனிமையான அனுபவமா இருக்கும்.”
‘டாக்டர்’ படத்துக்குக் கிடைச்ச மறக்க முடியாத பாராட்டுகள்..?
“என்னோட ‘டாக்டர்’ படத்தை ஆடியன்ஸ் ரசிச்சு கொண்டாடினது, பெரிய சந்தோஷமா இருந்துச்சு. ஏன்னா, அது ரெகுலர் படம் கிடையாது. சினிமாவுலேயும் இயக்குநர்கள் ஷங்கர் சார், வெற்றிமாறன் சார், டெக்னீஷியன்கள் ரவிவர்மன், ராஜீவ் மேனன்னு எல்லார்கிட்ட இருந்தும் பாராட்டுகள் குவிஞ்சது. ரஜினி சார் படத்தை ரெண்டு தடவ பார்த்திருக்கறதா சொன்னாங்க. விஜய் சாரும் மூணுமுறை பார்த்திருக்கார். நான் ரொம்பவே ரசிக்கற மணிரத்னம் சார், பிஜோய் நம்பியார்கிட்ட ‘டாக்டர்’ படத்தை பார்க்கச் சொல்லியிருக்கார். படம் பார்த்துட்டு பிஜோய்யும் என்கிட்ட சந்தோஷமா பேசினார். மணிசார் அப்படி ரெஃபர் பண்ணினதை நான் பெரிய பாராட்டா நினைக்கறேன். ஏன்னா, மணிரத்னம் சார் படங்களை அவ்வளவு பிரமிச்சு, சைலண்ட் ஆகவே பார்த்து ரசிப்பேன். ஏன்னா, விஷுவலாகவே அவ்ளோ கதை சொல்லியிருப்பார். அவரோட கம்போஸிஷன்ஸ், அழகியல் நேர்த்தி அத்தனையும் பிடிக்கும். அவர் பாடல் விஷுவலைஸ் பண்ற அழகுக்காகவே நிறைய தடவை அவர் படங்களைப் பார்த்திருக்கேன். ராஜமௌலி சார், அல்லு அர்ஜூன் சார்னு மத்த படவுலக ஆட்களும் பாராட்டினது உத்வேகமா இருந்துச்சு.”
அனிருத் தன் இசைப்பயணத்தில் பத்தாவது ஆண்டு கொண்டாடுறார்… அவரோட ஒர்க்கிங் ஸ்டைல் எப்படி?
“அனி, இப்ப ‘டான்’, ‘விக்ரம்’, ‘தலைவர் 169’னு நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்கார். அவர் எத்தனை படங்கள் பண்ணினாலுமே ரொம்பவே சின்ஸியரா ஒர்க் பண்ணுவார். இது பெரிய படம், இது சின்னபடம்னு வித்தியாசம் பார்க்க மாட்டார். என்னோட ‘கோலமாவு’க்காக அவர் முயற்சிகள்… அந்தப் படத்தை ஒப்பிடும் போது அவரது உழைப்பு அதிகம். ஒரு படத்தை பொறுத்தவரை அவர் கவனிக்கும் ஒரு விஷயம், கன்டன்ட். அந்த கன்டன்ட் ஜாஸ்தியா இருந்தா, அதை விட ஜாஸ்தியா அவர் மியூசிக் ரீச் இருக்கணும்னு விரும்பி உழைப்பார். இது ஒரு நல்ல விஷயம். நான் எப்ப படம் முடிச்சாலுமே முதன்முதல்ல படத்தை போட்டு அனிகிட்டத்தான் காண்பிப்பேன். என் மூணு படங்களையும் முதன்முதல்லா அவர்தான் பார்த்திருக்கார். அவர்கிட்ட படத்தைக் காட்டி, கருத்து கேட்பேன். அனி ஸ்டூடியோவில் என்ஜீனியரிங் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்சம் பேர் இருக்காங்க. அவங்ககிட்டேயும் கருத்து கேட்பேன். அங்கே சொல்றதுதான் என் படத்துக்கான முதல் விமர்சனம்.”
சிவகார்த்திகேயனை பாடலாசிரியாராகவே பார்க்க ஆரம்பிச்சீட்டிங்க..?
“நானும் அனியும் சேர்ந்து ஒரு பாட்டு பண்ண உட்காரும் போதே, எங்களுக்கு சௌகரியமான ஒரு பாடலாசிரியரா எஸ்.கே. தான் எங்க மனசுல வந்து நிற்பார். எஸ்.கே. ‘கோலமாவு’ல ‘கல்யாண வயசு’, ‘டாக்டர்’ல ‘செல்லம்மா’, ‘பீஸ்ட்’ல ‘அரபிக்குத்து’னு இந்த எல்லா பாடல்களையுமே அவர் எழுதும் போது அவ்ளோ கவனம் எடுத்து எழுதுவார். நாம எவ்ளோ கிரியேட்டிவ்வான ஆளாகவும் இருக்கலாம், திறமைசாலியாகவும் இருக்கலாம். ஆனா, ஒரு ஒர்க் கொடுக்கும் போது அதுக்கு எவ்ளோ தூரம் சீரீயஸா மெனக்கெடணும்னு இருக்குதுல்ல… அந்த சீரியஸ்னெஸ் அவர்கிட்ட அதிகமா இருக்கும். அவர்கிட்ட ஒரு பாட்டு கொடுத்துட்டா, அந்தப் பாட்டு ரெக்கார்ட்டிங் முடியற வரைக்கும் ஃபாலோஅப்பிலே இருப்பார். ‘இதை அப்படிப் பண்ணிக்கலாமா? அதை அப்படிப் பண்ணிக்கலாமா?’னு அதை மெருகேத்த கேட்டுட்டே இருப்பார். ‘பீஸ்ட்’ல கூட அவர் எழுதினா சரியா இருக்கும்னு நினைச்சு கூப்பிட்டோம். அவரும் இதை புரிஞ்சுக்கிட்டார். எங்க நட்புக் கூட்டணி எப்பவும் தொடரும்.”