புதுச்சேரி:
புதுவை பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் சிறந்த சுற்றுலா தலமாக புதுவையை மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழக பகுதிகளில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்து வருகின்றனர்.
வார வேலை நாட்களிலும் சுற்றுலா பயணிகளை வரவழைக்க பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டது. வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்னவீராம் பட்டினம் ஈடன் கடற்கரை என கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் புதுவையில் செலவிடும் நாட்களை அதிகப்படுத்தி உள்ளோம்.
கொரோனாவால் சுற்றுலா வருவாய் குறைந்தாலும், தீவிர முயற்சியால் அதை மீட்டெடுத்துள்ளோம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கடற்கரை திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் வழக்கமாக காந்தி திடலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை புதுவையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கடற்கரைக்கும் வரவழைக்க முடியும். வருகிற 13-ந்தேதி மாலை 6.30 மணிக்கு கடற்கரை சாலை லேகபேவில் படகு பாடல், இசையுடன் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்று விழாவை தொடங்கி வைக்கின்றனர். அன்றைய தினம் காந்தி திடல் கைவினை பொருள் கண்காட்சியில் கடல் உணவுத்திருவிழா தொடங்குகிறது. விழா நடைபெறும் 16-ந்தேதி வரை காலை 10.30 முதல் இரவு 9.30 மணி வரை கடல் உணவு திருவிழா நடைபெறும்.
13-ந்தேதி லேகபேவில் நாட்டுப்புற இசை, நடன நிகழ்ச்சியும், பாண்டி மெரினாவில் கர்நாடக இசை, தப்பாட்டம், சிலம்பம் ஆகியவையும் நடைபெறும்.
14-ந்தேதி காலாப்பட்டு முதல் புதுவைக்கு அதிகாலை 6 மணிக்கு சைக்கிள் மராத்தான் நடைபெறும். பாரடைஸ் கடற்கரையில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை மணல்சிற்ப கண்காட்சியும், மாலையில் நடனம், இசை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரையில் காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை புதுவை கலைஞர்களின் திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, பாண்டி மெரினாவில் காலை 10 மணி முதல் பட்டம் விடுதல், மதியம் 4 மணிக்கு கடற்கரை வாலிபால் போட்டிகள் நடக்கிறது. மேலும் லேகபேவில் மாலை 5.30 முதல் கடல் பொருட்கள் ஆபரண கண்காட்சி, மூங்கில் இசை விழாவும், பாண்டி மெரினாவில் சினிமா இசை நிகழ்ச்சியும், பாரடைஸ் பேச்சில் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
15-ந்தேதி பாண்டி மெரினாவில் பட்டம் பறக்க விடுதல், பொம்மலாட்டம், புதுக்குப்பம் கடற்கரையில் மலிவுவிலை பொருட்கள் அங்காடி, உறியடி நிகழ்ச்சி, பாண்டி மெரினாவில் வாலிபால் போட்டிகள், வயலின் இசை நிகழ்ச்சி, ஜிம்னாஸ்டிக், லேகபேவில் இசை, நடன நிகழ்ச்சி, சீகல்சில் பேஷன்ஷோ நடக்கிறது.
16-ந்தேதி காந்தி திடலில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு சூரிய உதய மீன் சுற்றுலா நிகழ்ச்சியும், லேகபேவில் மாலை 5.30 முதல் 9 மணிவரை இந்தோ ஆப்ரிக்கன் இசை நிகழ்ச்சியும், பாண்டி மெரினாவில் ஜூகல்பந்தி, துடுப்பாட்டம், மால்கம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்றை தினம் இரவு 7 மணிக்கு நிறைவு விழா, பரிசளிப்பு விழா நடக்கிறது.
நாள்தோறும் கடற்கரைக்கும், மனிதருக்கும் உள்ள உறவை மையப்படுத்தி கருத்தரங்கும் நடக்கிறது. ஆண்டுதோறும் கடல் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு முதல் யுகாதி பண்டிகை, விசு விழாவையும் கலை நிகழ்ச்சிகளோடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.