ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அவர்களை ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு அனுப்ப இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலம்பெயர்வோரை ருவாண்டா நாட்டுக்கு அனுப்பும் திட்டம் குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்க இருப்பதாகவும், அதற்காக, அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அது தொடர்பில், புலம்பெயர்வோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களது புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்க அனுமதிக்கும் பிரீத்தி பட்டேலின் Nationality and Borders Bill என்னும் மசோதா நிறைவேறுவதற்காக அமைச்சர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
அது நாடாளுமன்றத்தில் நிறைவேறி, பின் ராஜ குடும்பத்தின் அங்கீகாரத்தையும் பெற்றபின் ருவாண்டாவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த மசோதாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே எதிர்ப்பு காணப்படுகிறது.
மசோதா குறித்த விவாதத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரான Durham பிஷப் Rt Rev Paul Butler கூறும்போது, மக்கள் பாதுகாப்பு தேடி நம் நாட்டின் கரையில் வந்து சேரும்போது, நாம் நம் உயிருக்கு பயந்து ஓடும்போது நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என எதிர்பார்ப்போமோ, அப்படியே மற்றவர்களையும் நடத்தவேண்டியது நம் கடமை என்றார்.