புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. உத்தரப்பிரதேசம் உட்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா நேற்று நோட்டீஸ் கொடுத்திருந்தார். ஆனால், அவைத்தலைவர் வெங்கையாநாயுடு விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் அமளியில் நேற்று ஈடுபட்டனர். உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் பூஜ்ய நேரம் முடங்கியது. அதன் பின்னர் கேள்வி நேரத்திற்காக அவை மீண்டும் தொடங்கியபோதும் இதே நிலை நீடித்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவை மீண்டும் தொடங்கியபோதும் இதே நிலையை நீடித்தால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையில் பூஜ்ய நேரம் தொடங்கியவுடன் திமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி முழக்கமிட்டனர். தொடர்ந்து இதர எதிர்கட்சி உறுப்பினர்களும் ஒன்றாக திரண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அதன் பின்னர் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே திமுக எம்பி திருச்சி சிவா அளித்த பேட்டியில், ‘‘ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் தினசரியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு ₹9 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நடுத்தர மக்களையும், டீசல் விலை அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்க வழிவகை செய்கிறது. கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் குறைந்துள்ள நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க ஒன்றிய அரசு மறுக்கிறது.விறகில் சமையல் செய்துவந்த நிலையில் அவை சுற்றுச்சூழலை பாதிக்கும் என கூறி எரிவாயு உருளையை வழங்கினர். ஆனால் இப்போது அதன் விலை உயர்ந்ததால் தான் மக்களே பாதிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசை பொறுத்தவரையில் விலையேற்றம் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இல்லை. அதனாலேயே அவையை தொடர்ந்து ஒத்திவைத்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை உயரப்போகிறது. அதன் உண்மையை சொல்லி மக்களை அச்சப்படுத்த விரும்பவில்லை. எதிர்கால இந்தியா மோசமான நிலையில் இருக்கும். மாநில அரசின் வரிக்கும், ஒன்றிய அரசின் வரிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.பாஜ கட்சியானது ஜனநாயகத்தை மதிக்கும் அழகு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை நடத்தும் விதத்தை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற செயல்பாடுகள் ஒன்றிய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்றார். முன்னதாக, மாநிலங்களவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.