கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெறுவதால் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு உள்ளிட்ட பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஆளுங்கட்சி அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்க முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவெகய உள்ளிட்ட கட்சிகள் மறுத்தன. நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் காலை 10 மணியளவில் கூடியது. இதனைத் தொடந்து, நிதி அமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அவர் அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இன்று விலகியுள்ளார்.
இலங்கை சுதந்திர கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது, ஆளும் கட்சி எம்.பிக்கள் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளது ஆகியவற்றால் அரசு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை இழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆளும் இலங்கை பொதுஜன பெருமுன கட்சி, ஆட்சியை தொடரும் வகையில் 113 இடங்களை தக்கவைக்க முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என்றும், 113 இடங்களில் பெரும்பான்மை இருப்பதை எந்தக் கட்சி நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயார் என்றும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை முழுமையாக விலக்கி கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அமைச்சரவையில் ஜீவன் தொண்டைமான் இணை அமைச்சராக இருந்து வந்த நிலையில், இன்று காலை அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதேபோல், நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன் துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டியவும் ராஜினாமா செய்துள்ளார்.