மும்பை, மஹாராஷ்டிராவில், பொது இடங்களில் ‘ஹனுமன் சாலிசா’ என்ற பாடலை படிக்க, இலவசமாக ஒலிபெருக்கிகள் தருவதாக, பா.ஜ., மூத்த தலைவர் அறிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பரபரப்பு
இங்கு, உத்தவ் தாக்கரே உறவினரும், மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவருமான ராஜ் தாக்கரே சமீபத்தில் பேசுகையில், ‘மஹாராஷ்டிராவில், மசூதிகளில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்.
‘இல்லாவிடில்,மசூதி முன் ஒலிபெருக்கிகளை வைத்து, ஹனுமன் பாடல்களை படிப்போம்’ எனஅறிவித்தார். இது, பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.இந்நிலையில், மாநில பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான மோஹித் கம்போஜ் கூறுகையில், ”பொது இடங்களில் ஹனுமன் பாடலை படிக்க விரும்புவோருக்கு,இலவசமாக ஒலிபெருக்கிகள் தருவேன்,”என்றார்.
இது பற்றி, சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்ததாவது:மும்பை மாநகராட்சிக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலில், சிவசேனாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான், ராஜ் தாக்கரே இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.
வரவேற்பு
இதற்கு, பா.ஜ.,வும் உதவுகிறது. ஆனால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில், மசூதிகளில்
ஒலிபெருக்கிகள் அகற்றப்படவில்லை. மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கை அரசு
காப்பாற்றும்.இவ்வாறு சிவசேனா வட்டாரங்கள்தெரிவித்தன.
இதற்கிடையே, மாநிலத்தின் சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபு ஆஸ்மி கூறுகையில்,”ஹனுமன் பாடலை படிப்போரை வரவேற்று, அவர்களுக்கு பழரசம் கொடுப்போம்,” என்றார்.