திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே குற்றியாடி, கடியங்காட்டை சேர்ந்தவர் ரெஜின்லால் (வயது 28).
ரெஜின்லாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த கணிகா என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந் தேதி திருமணம் நடந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குற்றியாடி ஆற்றின் கரையோரம் புதுமண தம்பதியரை புகைப்பட கலைஞர்கள் போட்டோ ஷூட் எடுத்தனர்.
அதன்பின்பு குடும்பத்தினரின் விருந்து நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் நேற்று புதுமணமக்கள் உறவினர்களுடன் மீண்டும் குற்றியாடி ஆற்றங்கரையோர பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கும் புதுமண தம்பதிகளை போட்டோ எடுத்தனர். குற்றியாடி ஆற்றின் கரையோர பகுதியிலும் நிற்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அப்போது மணமக்கள் இருவரும் ஆற்றில் தவறி விழுந்தனர்.
இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பதால் அவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஆற்றில் குதித்து ரெஜின்லால், கணிகா இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
உடனடியாக அவர்களை அருகில் உள்ள மலபார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ரெஜின்லால் பரிதாபமாக இறந்தார். கணிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் கூறும் போது, குற்றியாடி ஆற்றில், மணமக்கள் இருவரும் நின்ற பகுதி ஆபத்தான இடமாகும். இதற்கு முன்பும் இந்த பகுதியில் பலர் ஆற்றில் விழுந்து இறந்துள்ளனர், என்றனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரெஜின்லால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.