மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கரோனா கட்டுப்பாடுகளின்றி பக்தர்கள் பங்கேற்புடன் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவிழா சார்ந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் முக்கிய திருவிழாவானது சித்திரை திருவிழா
இதில் மீனாட்சியம்மன் திருகல்யாணம், தோரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கு நிகழ்வு ஆகியன நடைபெறும். இந்த நிலையில், 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் தொடக்கமான இன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் மீனாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனமளிக்கவுள்ளார். பின்னர் 12-ம் தேதி மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிறவுள்ளார். கரோனா காரணமாக கடந்த 2 இரண்டுகளாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா பக்தர்கள் யாருமின்றி கோயில்களுக்குள் கொண்டாடப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகளின்றி நடைபெறும் திருவிழா என்பதால் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அழங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் சார்ந்த தொழில்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
வார வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்கும் குறிப்பிட்ட அலவிலான அனுமதி அல்லது நேர கட்டுப்பாடுகள் இருந்ததால் பெரிதளவில் வியாபாரிகள் லாபம் ஈட்டமுடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், கரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து, நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் இறுதியில் திரும்பிப் பெறப்பட்டன. கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டவுடன் வரும் முதல் திருவிழா என்பதால் மதுரை மாவட்ட மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.