இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் ஒருகட்டமாகத் தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுள்ளன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாலேயே ஒரு மாநிலத்தில் உருவாகும் ஆறு அந்த மாநிலத்திற்கு மட்டும் சொந்தமாகி விடாது.
மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகள் மீது, அவை பாயும் அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக கடைமடை மாநிலத்திற்கு உள்ள உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தான் 1956&ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
காவிரி உள்ளிட்ட மாநிலம் விட்டு மாநிலம் பாயும் ஆறுகள் மீதான தமிழகத்தின் உரிமை ஓரளவாவது பாதுகாக்கப்படுகிறது என்றால், அதற்கு முதன்மைக் காரணம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல் சட்டம் தான்.
காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது; வெள்ளம் ஏற்பட்டால் மட்டும் தமிழ்நாட்டை காவிரி ஆற்றின் வடிகாலாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் கர்நாடக அரசின் எண்ணமாக உள்ளதாக தமிழக அரசியல் காட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் உபரி நீரையும் தடுப்பதற்காக கர்நாடகம் உருவாக்கிய திட்டம் தான் ரூ.9000 கோடியில் 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையை கட்டும் திட்டம் ஆகும்.
மேகதாது அணையை கட்டவிடாமல் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய பாமக இளைஞரணி தலைவரும், எம்.பி.,யுமான Dr. அன்புமணி இராமதாஸ், “மேகதாது அணை கட்டுவதற்கு எந்தவிதமான அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை. மேகதாது விவகாரம் வெறும் நதிநீர் பிரச்சினை மட்டுமல்ல, உணர்வுபூர்வமான பிரச்சினை.
மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” என்று Dr.அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்து பேசி உள்ளார்.