வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 40 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் போரில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாத ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகளை வியூகம் வகுத்துள்ளது. அதே வேளையில் உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலக்கை மாற்றிய ரஷ்யா.. இதுவரை தலைநகர் கீவை நோக்கி தனது இலக்குகளை நிர்ணயித்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா தற்போது கீவிலிருந்து வெளியேறி வருகிறது. உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை ரஷ்யா குறிவைத்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் நிருபர்களிடம் கூறுகையில், “ரஷ்யா தான் நினைத்ததுபோல் ஒட்டுமொத்த உக்ரைனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. அதனால், தற்போது கிழக்கு, தெற்கு பகுதிகளில் தனது இலக்கை நிர்ணயித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணை.. கீவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்யா வெளியேறிய நிலையில் புச்சா நகரம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. புச்சா நகர தெருக்களில் 100 கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைகள் பின்னால் கட்டப்பட்டு, நெற்றியில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ள சடலங்கள் கிடப்பதால், இது போர்க்குற்றம் என உக்ரைன் கூறிவருகிறது. ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புச்சா நகர சம்பவத்தைக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் ரஷ்ய அதிபர் புதினை போர்க் குற்றவாளி என்று அழைத்துள்ளார். போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புச்சா நகர படுகொலை என்று பொருள்படும் ஹேஷ்டேகுகள் குவிந்தன. ஆனால், இவற்றை மெடா நிறுவனம் தடை செய்தது. அது குறித்து விளக்கமளித்த மெடா நிறுவனம், மனித உரிமை அத்துமீறலை கவனத்துக்குக் கொண்டு வர அந்த ஹேஷ்டேகுகள் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் கீழ் பகிரப்படும் புகைப்படங்கள் கொடூரமானதாகவும், கொலைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவும் இருப்பதாலும் அவற்றை நீக்கியதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் ரஷ்யா மீது இன்னும் அதிகப்படியான தடைகளை விதிக்க இருக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்த அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாகவும், உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், ரஷ்ய அதிபர் புதின் மீது போர்க் குற்ற விசாரணையைத் தொடங்க அனைத்து நடவடிக்கைளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.