நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸுக்கு வெளியில் இருந்தும், கட்சிக்குள்ளிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸின் இத்தகைய தோல்விக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. அதையடுத்து, நடத்தப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவர் யார் என்று கேள்விகள் பரவலாக எழுந்து வருகிறது. இதுபோன்ற அரசியல் குழப்பங்களுக்கிடையில், காங்கிரஸின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டார்.
அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பேசிய சோனியா காந்தி, “சமீபத்திய தேர்தல் முடிவுகளால் நீங்கள் எவ்வளவு ஏமாற்றமடைந்துள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். கட்சியினரின் மன உறுதியானது சோதனைக்குள்ளாகிறது. வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி முன் எப்போதும் இல்லாத அளவில் சவால்களை சந்திக்கவுள்ளது. எனவே கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை மிக முக்கியம். அதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் செய்ய நான் உறுதியாக இருக்கிறேன். மேலும், அனைத்து மாநிலங்களிலும் பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. இதனால் நம்மிடையே தொடர்ந்துவரும் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நாம் அனுமதிக்கக் கூடாது” எனக் கூறினார்.