முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்றாண்டுக்கான (2021) தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் நேற்று (04) நாயாறு கடற்கரையில் இடம்பெற்றது.
2021 ஆம் ஆண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் கொரோனா இடர் காரணமாக இடம்பெறவில்லை.
சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினமானது வருடா வருடம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரமாக நாட்டின் கரையோர பிரதேசங்களில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டுவது வழக்கம்.
முல்லைத்தீவு மாவட்ட செயலக தேசிய கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் தலைமையில் நாயாறு தொடக்கம் செம்மலை வரையிலான ஐந்து கிலோமீட்டர் தூரமான கடற்கரை பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
எதிர்கால சந்ததியினருக்கு கடற்கரையோர பாதுகாப்பு மற்றும் சுத்தப்படுத்தும் அவசியத்தை வலியுறுத்துவதுடன் நீர் மாசடைதலை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
இதன்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன், கண்ணாடிகள், ஏனையவை என மூன்று பகுதிகளாக தரம் பிரிக்கப்பட்டு பெருந்திரளான திண்மக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.