பெங்களூரு : பொது மக்களின், நீண்டகால கோரிக்கையான, பி.எம்.ஆர்.சி.எல்., தின ‘பாஸ்’ மற்றும் மூன்று நாள் பாஸ் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அதை குறைக்க வேண்டும் என, பயணியர் தெரிவித்துள்ளனர்.பி.எம்.டி.சி.,யை போல, மெட்ரோ ரயில் பயணத்துக்கும், தின பாஸ் வழங்கும்படி பயணியர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதன்படி பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், ஏப்ரல் 2 முதல், தின பாஸ் மற்றும் மூன்று நாள் பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அதிக கட்டணம் நிர்ணயித்ததால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர். பி.எம்.டி.சி., பஸ்களில் நாள் முழுதும் பயணிக்க, குறைந்தபட்சம் 70 ரூபாய், அதிகபட்சம் 147 ரூபாய் நிர்ணயித்துள்ளது. ஆனால் தின பாசுக்கு 200 ரூபாய், மூன்று நாள் பாசுக்கு 400 ரூபாய் நிர்ணயித்துள்ளது.சாதாரண மக்களுக்கு பதில், பணம் உள்ளவர்களை குறி வைத்து, பி.எம்.ஆர்.சி.எல்., கட்டணம் நிர்ணயித்துள்ளது.
குறிப்பிட்ட நோக்கத்துக்காக, பஸ்களில் ஒரு திசையிலிருந்து, மற்றொரு திசைக்கு பயணிப்பது கஷ்டம்; அதிக நேரம் செலவாகும். எனவே பலரும் மெட்ரோ ரயிலின் தின பாஸ் அல்லது மூன்று நாள் பாஸ் வாங்கலாம்.பணி நிமித்தமாக, பெங்களூருக்கு வரும் பயணியர், நாள் முழுதும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதில்லை. அவர்கள் விரைந்து பணியை முடித்து, திரும்பி செல்லும் அவசரத்தில் இருப்பர். இவர்கள் சிறிது நேர பயணத்துக்காக, 200 ரூபாய் கொடுத்து தின பாஸ் வாங்குவது சந்தேகம்.
இதை விட பி.எம்.டி.சி., பஸ் பாஸ் மேலானது என, பயணியர் கருதுகின்றனர்.தின பாசுக்கு 100 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். முடிந்தால், மெட்ரோ மற்றும் பி.எம்.டி.சி., பாஸ்களுக்கு, ஒரே விதமான கட்டணம் இருந்தால், உதவியாக இருக்கும் என பயணியர் கருதுகின்றனர்.
Advertisement