மைசூரு : யானைகளுக்கு ‘ஷவர் பாத்’, ஒட்டக சிவிங்கிக்கு பூநீர் தெளிப்பான் சிங்கம், சிறுத்தைக்கு செயற்கை மழை, ஹிமாலயன் கரடிகளுக்கு ‘ஐஸ் டியூப்’ உட்பட பல வழிகளில் விலங்குகள் குளிர்ச்சியாக வைக்கப்படுகின்றன.கோடைக்காலம் வந்தால், மனிதர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்படுவர். இதற்கு விலங்குகளும் விதி விலக்கல்ல. இதை உணர்ந்தே, மைசூரு மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர், பல இடங்களில் விலங்குகளை குளிர்ச்சியாக வைக்க தண்ணீர் தெளிப்பான்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
மைசூரில் ஏற்கனவே வெப்பநிலை 35 டிகிரி செல்ஷியசாக அதிகரித்துள்ளது. விலங்குகள், பறவைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றன.இவற்றின் நலனுக்காக, அதிகாரிகள் பல நடவடிக்கை எடுத்துள்ளனர். உணவிலும் சிறப்பு அக்கறை காண்பிக்கின்றனர்.விலங்குகளுக்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவு வழங்கப்படுகிறது. சிம்பன்சி குரங்குகளுக்கு மதிய நேரத்தில், இரண்டு இளநீர் வழங்கப்படுகிறது. எலக்ட்ரால் தண்ணீர் ஹிமாலயன் கரடிகளுக்கு, ஐஸ் கியூபுடன், பழங்கள் தரப்படுகின்றன. எலக்ட்ரால் கலந்த தண்ணீர், குளுக்கோஸ் நீர் வழங்குகின்றனர்.தர்ப்பூசணி, சாத்துக்குடி, வாழைப்பழம், திராட்சை, மாதுளை, ஆரஞ்சு பழங்களை விலங்குகள் உட்கொள்கின்றன.ஒட்டக சிவிங்கி உட்பட மற்ற விலங்குகளின் மீது, அவ்வப்போது ‘ஸ்பிரிங்லர்’ வாயிலாக தண்ணீர் பூ போல தெளிப்பதால், குளிர்ச்சியான அனுபவத்தை பெறுகின்றன. இதற்காகவே ஒவ்வொரு விலங்குகளின் வீடு அருகில், தண்ணீர் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.யானைகள் குளித்து விளையாட, சிறப்பு ‘ஷவர்’ பொருத்தப்பட்டுள்ளது. காட்டெருமை, சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகளுக்காக, செயற்கை மழை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது விலங்குகளின் உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.ஜலக்கிரீடை பெரும்பாலான விலங்குகள் மண்ணில், தண்ணீரில் விளையாட விரும்புகின்றன. எனவே மிருகக்காட்சி சாலையில், மண், ஷவர் பாத் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் விலங்குகள் ஜலக்கிரீடை செய்து குஷியடைகின்றன.கர்நாடக மிருகக்காட்சிசாலை வாரிய தலைவர் மகாதேவசாமி கூறியதாவது:வெப்பத்தின் தாக்கம், விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதை மனதில் கொண்டு, மிருகக்காட்சி சாலையில் விலங்குகள் வசிக்கும் இடங்கள் குளிர்ச்சியாக வைக்கப்படுகிறது.பல இடங்களில், நிழலுக்காக ‘ஷெல்டர்’ கட்டப்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து மிருகக்காட்சி சாலையிலும், கோடை காலத்தில் விலங்குகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள, இளநீர், பழங்கள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement