புத்தம்புது காப்பியின் இந்த வார அத்தியாயம் ஒரு திரைக்கதை அல்ல. தமிழ் சினிமாவில் நான் பார்த்து, ரசித்த ஒரு திரைக்கதை பற்றிய, அதன் நுணுக்கங்கள் பற்றிய விரிவுரை! அதன் படைப்பாளி பற்றிய புகழுரை!
தமிழ் சினிமாவில், திரைக்கதை பற்றிய தொகுப்பு எனும்போது இவரைப் பற்றி குறிப்பிடாமல், அந்த தொகுப்பு முழுமை பெற முடியாது. அவர் வேறு யாருமல்ல இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள்தான்.
தமிழ் சினிமாவையும், அதன் வரலாற்றையும் ஆழ்ந்து கவனித்தவர்களுக்கு, அவர் ஒரு “திரைக்கதை மேதை” என்பது தெளிவாகத் தெரியும். இதுவரை அது தெரியாதவர்களுக்கு கூட இந்த அத்தியாயம் இனி தெளிவு சேர்க்கும் என்று நம்புகிறேன்.
1981 ஆம் ஆண்டு, கே.பாக்யராஜ் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், கங்கைஅமரன் அவர்களின் இசையில், மிகப்பெரிய ஜனரஞ்சக வெற்றியை பறைசாற்றி ஒலித்தது “மௌன கீதங்கள்”.
“சூழ்நிலையால் ஒரு தவறு செய்யும் கணவன், தன்னை வெறுத்து, தன் பாவ மன்னிப்பை ஏற்க மறுத்து, பிரியும் மனைவிக்கு தன் அன்பு புரியும் வரை காத்திருந்து, மீண்டும் குடும்பமாக இணையும்” ஒரு எளிய கதை. நம் சொந்தங்களில், நம் தெருக்களில், நம் ஊரில் ஏதோ ஒரு இடத்தில் நாம் கேட்ட,கேள்விப்பட்ட, கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் கதைகளில் ஒன்று. இதில் கணவன் மனைவி பிரிவுக்கான காரணம் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம், தவறுகள் மாறலாம். ஆனால், பிரிவுகள் இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை ஜனரஞ்சகமான திரைக்கதையாக்கிய விதத்தில்தான் பாக்யராஜ் தனித்து ஜொலிக்கிறார்.
நான் பிறக்கும் முன்பே வெளியான சினிமா இது. ஆனாலும் இதன் கதை சொல்லலில் ஈர்க்கப்பட்டு, இதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். என் அறிவுக்கு எட்டிய வரை இந்த திரைக்கதை 8 பாகங்கள் கொண்டது.
1. நாயகன் நாயகி அறிமுகம் மற்றும் சந்திப்பு.
2. அவர்களுக்குள்ளான காதல்.
3. திருமணத்திற்குப் பிறகான முதல் சில ஆண்டுகளில் வரும் ஊடல் கூடல்.
4. குடும்ப வாழ்க்கையில் விரிசல் உண்டாக்கும் அந்த தவறு. அதற்கான சூழ்நிலை.
5. கணவன் மனைவி பிரிவு.
6. ஐந்தாண்டு பிரிவுக்கு பிறகான சந்திப்பு.
7. ஐந்தாண்டு பிரிவுக்கு பிறகான மன மாற்றங்களும் அதற்கான சூழ்நிலைகளும்.
8. குடும்பம் இணைவது. சுபம்.
என்னைப் பொறுத்தவரை, மௌன கீதங்கள் இன் பிரம்மாண்ட வெற்றி என்பது, இரண்டு முக்கியமான காரணங்களால் சாத்தியப்பட்டிருக்கலாம்.
முதல் காரணம், நான் மேற்கூறிய 8 பாகங்களும், திரைக்கதையினுள்ளே சுவாரசியமான நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும். அந்த நிகழ்வுகள் இயல்பாகவே அதற்கான நகைச்சுவையையும் கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனும் அந்த காலகட்டத்தில் ஏதோ ஒரு வகையில் அது போன்றதொரு நிகழ்வை கடந்து வந்திருப்பான் அல்லது கேள்விப்பட்டிருப்பான்.
இரண்டாவது முக்கியமான காரணம், திரைக்கதையின் இந்த எட்டு பாகங்களும், நேர் வரிசையில் சொல்லப்பட்டிருக்காது. இந்த 8 பாகங்களையும், அதனுள் இருக்கும் நிகழ்வுகளையும் கலைத்துப் போட்டு, சுவாரஸ்யமாக்கி தொகுத்து இருக்கும் அந்த வரிசைதான், “மௌன கீதங்கள்” படத்தின் பெரும் பலம்.
அந்த நுணுக்கம்தான் கே பாக்யராஜ் அவர்களின் திரைக்கதை ஆளுமைக்கான சான்று.
குடும்ப உறவுகள் மற்றும் சமூகம் சார்ந்த கதைகளை கையாள்வது என்பது, அறிவியல், கற்பனை மற்றும் மாயாஜாலக் கதைகளை கையாள்வதை காட்டிலும் சவாலான விஷயம். ஏனென்றால் குடும்ப மற்றும் சமூக கதைகள் நம் அன்றாட வாழ்வில் இருந்து பிறப்பவை.
நம் பார்க்கும் கேட்கும் எல்லா தினசரி நிகழ்வுகளும் சுவாரசியமானதாக இருப்பதில்லை. அதில் முக்கியமானதை மட்டும் தேர்ந்தெடுத்து. கற்பனை கொண்டு பட்டை தீட்டி, ரசிக்கத்தக்க வரிசையில் தொகுத்து தருவதுதான், ஒரு நல்ல திரைக் கதையின் சாராம்சம்.
இதில் கை தேர்ந்தவர்கள் வெகு சிலரே. “கே.பாக்யராஜ் அவர்கள் இதில் ஜாம்பவான்”. இந்த உண்மையை தமிழ் சினிமாவுக்கு உரக்கச் சொல்லிய படத்தின் பெயர்தான் “மௌன” கீதங்கள்.
கதைமாந்தர்களின் வாழ்வில், வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை, நேர்கோட்டில் சொல்லாமல் கலைத்துப் போட்டு, ரசிகர்களின் ரசனையை அதிகரிக்கும் வகையில் தொகுத்துத் தருவதுதான், நான்-லீனியர் கதை சொல்லலின் அடிப்படை.
அந்த வகையில் ஒரு குடும்ப உறவு சார்ந்த கதையை, ஜனரஞ்சகமான நிகழ்வுகளால் கட்டமைத்து, அன்றைய காலகட்டத்தில் புதிய திரைக்கதை நுணுக்கங்களை புகுத்தி, ஒரு மாபெரும் வெற்றியை “மௌன”மாக வரலாற்றில் பதிவு செய்து ஒலித்திருக்கிறது இந்த Non-linear “கீதங்கள்”.
இதுவரை இந்த திரைப்படத்தை பார்த்திராத ரசிகர்கள் இன்றும் Youtube மற்றும் Sun Nxt ல் பார்க்கலாம். ஒரு கிளாசிக் அனுபவமாக இருக்கும்.
மீண்டும் “திரை”க் கதை பேசுவோம்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.