புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ள நிலையில் அதைத் தடுக்கும் வகையில் இந்தியாவுக்கு தாங்கள் போதனை செய்ய முடியாது என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டு தூதர் வால்டர் ஜெ லிண்ட்னர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யா முன் வந்துள்ளது.
போருக்கு முந்தைய விலையில் ஒரு பீப்பாய்க்கு 35 டாலர்கள் வரை தள்ளுபடியில் முதன்மையான உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படும். ஆனால் இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்து வருகின்றன.
எங்கள் நாட்டின் நலனுக்கு தான் முதலிடம் கொடுப்போம், தள்ளுபடியில் கிடைத்தால் ஏன் வாங்கக்கூடாது என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ஜெர்மனி தூதரிடம் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த வால்டர் ஜெ லிண்ட்னர், “ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ரஷ்ய எண்ணெய், நிலக்கரியை சார்ந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், புதின் ஒருநாள் இவ்வாறாக அண்டை நாட்டின் மீது போர் தொடுப்பார் என நாங்கள் நினைக்கவில்லை. அதனால் இப்போது நாங்கள் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்துள்ளோம். விரைவில் இதை ஜீரோ என்றளவுக்குக் கொண்டு வருவோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேவை இருக்கிறது. சார்புநிலை இருக்கும். நாங்கள் இந்தியாவுக்கு போதனை செய்ய முடியாது. நாங்கள் சில பொருளாதார தடைகளை விதிக்கிறோம். அதனால் போரை நிறுத்த முடிந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.