வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புச்சா-உக்ரைனில், ரஷ்ய படைகள் பின்வாங்கிய தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குண்டு காயங்களுடன், 410 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.ரஷ்யப்படையினர் அவர்களை சித்ரவதை செய்து கொன்றுள்ளதாக, உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது
.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்ரவரி 24ம் தேதி முதல், ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இருநாடுகளுக்கு இடையில் நடந்த பேச்சில், தலைநகர் கீவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வதாக ரஷ்யா அறிவித்தது.இதைத்தொடர்ந்து, ரஷ்யா தன் வீரர்களை திரும்பப் பெற்றது. எனினும், ரஷ்ய படையினர் பின்வாங்குவதற்கு முன், அங்கிருந்த மக்களை கொன்று குவித்ததாக உக்ரைன் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதற்கு ஏற்ப, அந்தப் பகுதிகளில் மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கீவில் உள்ள புச்சா என்ற பகுதியில் மட்டும், 21 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கைகள் கட்டப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், அந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை சித்ரவதை செய்து ரஷ்ய வீரர்கள் கொன்றுள்ளதாக, உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இதுவரை, 410 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புச்சா பகுதியில் சாலையில் கிடக்கும் சடலங்களின் புகைப்படங்கள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன
.இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:உக்ரைன் மக்களை சித்ரவதை செய்து படுகொலை செய்த ரஷ்யாவை, அதற்கு பொறுப்பேற்க வைப்போம். ரஷ்ய படையினரின் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த சம்பவத்திற்காக, ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Advertisement