ஜெய்ப்பூர்: சரிஸ்கா புலிகள் சரணாலய பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவிலான பகுதிகள் எரிந்து நாசமாகின. ராஜஸ்தான் மாநிலம் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தை சுற்றிலும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் 24 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் ராஜஸ்தானில் வெயில் கடுமையாக வாட்டி வதைப்பதால் வனப்பகுதியில் மரங்கள் காய்ந்துள்ளன. வெப்பமண்டல வறண்ட காடு என்பதால் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் கடந்த ஒரு வார காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் எரிந்ததாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையில் 1,281 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பல்வேறு எல்லைகளில் நான்கு தீ விபத்துகள் ஏற்பட்டன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சரிஸ்காவில் ஏற்படும் தீ விபத்துகள் அசாதாரணமானது அல்ல; இந்த ஆண்டு காட்டுத் தீயின் கொடூரம் அதிகமாக உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காட்டுத் தீக்கு பயந்து காப்பகத்தில் தஞ்சமடைந்துள்ளன. கோடைக் காலங்களில் அவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிபத்துகள் யாவும், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தீவிபத்துகளாகத்தான் உள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகிறோம். காட்டுத்தீயை அணைக்க முடியாததால், மனிதர்கள் மற்றுமின்றி விலங்குகள் மற்றும் மரங்களுக்கு பெருத்த சேதம் ஏற்படுகிறது’ என்றனர்.